View Single Post
  #1  
Old 27-02-08, 11:03 PM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
எழுத்தாளர் சுஜாதா மரணம்..!

எழுத்தாளர் சுஜாதா மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

தமிழ் எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்தவர்.
அவருடைய நடையின் பாதிப்பை பல எழுத்தாளர்களிடம் பார்க்கலாம். நம்முடைய தள எழுத்தாளர்களிடம்தான்.

இரண்டு தலைமுறை வாசகர்களை வசியப்படுத்தியிருந்த சுஜாதாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

தினத்தந்தியில் வந்த கீழ்காணும் செய்தியை இணைத்துள்ளேன்.By Hayath


பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்


சென்னை, பிப்.28-

பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.



எழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது அருகில் அவரது மனைவி இருந்தார்.



சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர்.

சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும்.


வாழ்க்கை குறிப்பு

எழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் பெயர் ரெங்கராஜன்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.

மின்னணு வாக்குபதிவு எந்திர தயாரிப்பு

27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

டெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார். சுஜாதாவிற்கு முதலில் கம்ப்ட்டர் மூலம் தமிழில் கதையை எழுதியவர் என்ற பெருமையும் உண்டு.

திரைப்படங்கள்

1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கேஷவ பிரசாத் ஜப்பானிய பெண் `கே' என்பவரை மணந்தவர் ஆவார்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்களைக் கொண்ட இவரது துப்பறியும் நாவல்கள் பிரபலமானவை. இதேபோல் ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.

சுஜாதா எழுதிய நாவல்களான காயத்ரி, ப்ரியா, கரையெல்லாம் செண்பகப் பூ போன்றவை சினிமா படங்களாக தயாரிக்கப்பட்டன. ப்ரியாவில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார்.

டைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில் இணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுச் செய்தி கேட்டு சில நிமிடங்கள் உறைந்து போனேன். சிவாஜி வெள்ளி விழா மேடையில் தான் அவரை இறுதியாகச் சந்தித்தேன். மரணத்திற்கும் அவருக்கும் சில வார தூரம்தான் என்பது அப்போதெல்லாம் எனக்கு தெரியவில்லையே. ஒரு கடல் சட்டென்று உள்வாங்கி விட்டதைப் போல உணர்கிறேன். அவர் பெருமைகள் உள்ளத்திரையில் ஒவ்வொன்றாய் ஓடி மறைகின்றன. அவர் விஞ்ஞானிகளின் எழுத்தாளர்; எழுத்தாளர்களின் விஞ்ஞானி.

கணிப்பொறி அறிவு மூலம் தமிழுக்கு நவீன நாவு தந்து பேச வைத்தவர். கவிதை பறவைகளின் வேடந்தாங்கலாய் விளங்கியவர். நாடு வியந்த நட்சத்திர எழுத்தாளர். தமிழின் அத்தனை வடிவங்களையும் ஆண்டு பார்த்தவர். மரணம் தமிழின் விஞ்ஞான விரலை பறித்து விட்டது. ஆனால் விரலின் ரேகைகள் அழிவதில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.

Last edited by Hayath; 28-02-08 at 06:34 PM.
Reply With Quote